அண்ணாவியார் புலவர் - 6
செய்யது முஹம்மது அண்ணாவியார்
(இரண்டாம் செய்யது முஹம்மது)
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இசுலாம் தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடற்கரையோரங்களில் நுழைந்து கால தாமதமில்லாது உள் நாட்டிலும் பரவி நின்றது. கேரளத்தில் கொடுங்கல்லூரில் ஹஜ்ரத் மாலிக் பின் தினார்(ரலி) அவர்கள் வந்த அதே காலம் அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் ஹஜ்ரத் தமீமுல் அன்சாரி(ரலி) அவர்களும் ஹஜ்ரத் உக்காஷா(ரலி) அவர்களும் வந்தார்கள் என்று வரலாறு குறிப்பிடுகிறது.
[நபிமணித் தோழர்களான ஹழரத் உக்காஷா (ரலி) மஹ்மூது பந்தர் என்னும் பரங்கிப்பேட்டையிலும், ஹழரத் தமீமுல் அன்சாரி (ரலி) சென்னையை அடுத்த கோவளத்திலும், ஹழரத் வஹப் (ரலி) சீனத் துறைமுகமான காண்டன் நகரத்திலும் நல்லடக்கம் பெற்றுள்ளனர். இச்செய்தி மௌலானா அக்பர்ஷாஹ்கான் நஜீப் ஆபாதி எழுதிய ஆயினயே ஹகீகத்துன் நாமா (உண்மையான வரலாற்றுக் கண்ணாடி) எனும் உருது நூலில் (பக். 47&48) குறிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நஃபீஸ் அகாடமியால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ‘Saints of India’ (இந்தியாவின் துறவிகள்) எனும் ஆங்கில நூலிலும் (ப. 137) இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேரா.சா.அப்துல்ஹமீது குறிப்பிடுகிறார்.]
ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்கக்கூடிய 'முஜத்திது'கள் வருவார்கள என்ற நபி மொழிக்கேற்ப நபித்தோழர்களின் வருகைக்குப் பிறகு தென் இந்தியாவில் இசுலாம் பரவி நின்றாலும் அதன் பிறகு தன் வலுவிழந்திடாமல் இருக்க இறைநேசர்கள் வந்தார்கள். அவர்கள் வெறும் மார்க்கத்துடன் நின்று விடாமல் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். 'லக்கும் தீனுக்கும் வலியதீன்' என்ற இறை சொல்லிற்கேற்ப எல்லா மதத்தவரையும் அரவணைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
தாம் பெற்ற ஞானத்தை சுவைத்து, அனுபவித்து பின் மக்களுக்கும் பகிர்ந்துக்கொடுத்தோடு நின்றுவிடாமல் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் இவைகளை வகுத்துக் கொடுத்து இஸ்லாத்திற்கு தங்கள் வாழ்நாள் முழுவதையுமே அர்ப்பணித்த இறைநேசர்களை நினைவுகூறுவது சான்றோர்களின் பண்பாகும். இது மனித கலாச்சாரத்தில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகும்.
இதன் விளைவாக வந்ததுதான் மவுலிது, பைத்து, முனாஜாத்து, கஸீதா, பாமாலை போன்றவை. தமிழ் இலக்கியத்திற்கு சற்றும் சளைக்காத வண்ணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நின்று நிலவுகிறது. சற்றேறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் வரை தமிழக முஸ்லிம்களால் சுபுஹான மவுலிது, முஹையிதீன் மவுலிது இன்னபிற பைத்துக்களும் ஓதப்பட்டு வந்தன. ஆனால் இன்று அவற்றைக் காணோம். "ஏட்டுச் சுரக்காய் ஆலிம்களின் வருகையால் இன்றைய சமுதாயம் குறிப்பாக இளையசமுதாயம் ஒருவித மாயையில் சிக்கி எங்கே இருக்கிறோம் என்றுகூட தெரியாமல் ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் சிக்கிய கலம் போல அல்லாடிக் கொண்டிருக்கிறது".
எனினும், உண்மை உணர்ந்த அறிஞர்கள் இந்த சலசலப்பைக் கண்டு அஞ்சாமல் தம் பணியை அமைதியாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேட்டத்திற்குத் தகுந்தாற்போல் அறிவை ஊட்டி வருகிறார்கள். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் தமிழ் புலமை நிறைந்திருந்தது. எனவே அப்போதைய ஆலிம்களும் புலவர்களாக இருந்தனர். அந்த வகையில் பரம்பரை ஞானத்துடன் வாழ்ந்தவர்தான் செய்யது முகம்மது அண்ணாவியார்(இரண்டாம் செய்யது முகம்மது). இவர். நவரத்தின கவி காதிர் முஹையிதீன் அண்ணாவியாரின் மூத்தப் புதல்வர். இவருக்கு ஹபீப் முகம்மது அண்ணாவியார் என்ற இளவல் உண்டு. இவர் 1857 நவம்பரில் பிறந்து 77 ஆண்டுகாலம் வாழ்ந்து 1934 செப்டம்பர் மாதம் இறையடி சேர்ந்தார்.
'கவிஞன் பிறக்கிறான் அறிஞன் உருவாக்கப் படுகிறான்' என்ற சொல்லிற்கேற்ப தம் முன்னோர் போலவே கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். 'சரம கவிதை', 'வ,ழிநடைச் சிந்து', நபிகள் நாயகம் ரசூல்(சல்) அவர்கள் பெயரால் 'கீர்த்தனைகள்' போன்றவைகளை இயற்றியிருக்கிறார்கள்.
சிந்து, செந்தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. சந்த நயங்கள் சிந்தித் ததும்பும் சிந்துக்குச் சொந்தக்காரர்களாகி புலமைச் சிகரத்தில் கொடிக்கட்டிப் பரக்கவிட்டவர்கள் அண்ணாவியார் மரபினர் என்றால் அது மிகையாகாது. முத்துப்பேட்டை நாயகம் செய்கு தாவுதொலி மீது இவர் தந்தை, 'பிள்ளைத் தமிழ்' பாடி இருக்கிறார்களென்றால் பிள்ளையான இவர் நாகூர் நாயகத்தின் மீது 'புகைரதச் சிந்து' பாடியிருக்கிறார்கள்.
நாகூர்பதி வாழும் சாஹுல் ஹமீதொலி பாதுஷா நாயகம் மீது பாடாத புலவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இன்றும் பலர் பா இசைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாதுஷா நாயகத்தை தரிசிக்க ஒருவர் நாகூர்பதி செல்கிறார், ஆங்கு அவருக்கு சில அனுபவங்கள் ஏற்படுகின்றன, அந்த அனுபவத்தில் சுவைத்த உணர்ச்சியை பாடலாக வடித்தார். அவர் வேறு யாருமல்ல, பாமர முஸ்லிகள் உள்ளங்களில் பக்திக்கனலெழுப்பிய அப்துல் காதர் என்ற பழுத்த ஆலிமாக இருந்து பின் மஸ்தானாக மாறிய குணங்குடியார்.
'திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி
சிங்காசனாதிபர்கள் அதையேந்தியே வந்து
ஜெயஜெயா வென்பர் கோடி
அக்கனருள் பெற்றபெரி யோர்கள்ஒலி மார்கள்அணி
அணியாக நிற்பர் கோடி
அஞ்ஞான வேரறுத்திட்டமெய் ஞானிகள்
அனைந்தருகு நிற்பர் கோடி
மக்கநகராளும் முஹம்மது ரசூல்தந்த
மன்னரே என்பர் கோடி
வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்கும் உம்
மகிமை சொல் வாயுமுண்டோ
தக்க பெரியோன் அருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!
தயையைவைத் தென்னையாள் சற்குணங்குடி
சாகுல் ஹமீத் அரசரே!'
நாளை மகுஷரில் நரக வாயிலில் நின்று இபுலீசை நொந்துக்கொள்ளும் நிலை நேராதிருக்க வேண்டுமெனில் கலி(குறை, அதர்மம்) தீரவேண்டும், கருத்தில் இபுலீசின் வலி தீரவேண்டுமெனில்-மறுமையில் நலம் சேரவேண்டுமெனில் துறைமுகப் பட்டினமான நாகப்பட்டினத்தில் வாழும் நாகை துரையவர்களை நாம் என்னாளும் உயிர் துணையாகக் கொண்டாடிடுவோம். அவர்களை இயக்கிவைத்த இலட்சியம் நம்மையும் இயக்கட்டும்; நாமும் புனிதம் பெறுவோம் என சவ்வாது புலவர் பாடுகிறார்.
'கலிதீர வேண்டும் கருத்தில் இபுலீஸ்
வலிதீர வேண்டுமென வந்தால்-ஒலியான
நாகைத் துரையார்எந் நாளும் உயிர்துணையார்
நாகைத் துறையார் நமக்கு.'
இப்படி புலவர்களும், புரவலர்களும், பாமரர்களும் போற்றிப் புகழும் நாகூர் நாயகத்தை தரிசிப்பதற்காக நாயகன் தன் நாயகியுடன் செல்கிறார். அது கந்தூரி காலம், அப்போதுதான் இருப்புப் பாதைப் போடப்பட்டிருக்கிறது, எனவே புகை வண்டியில் செல்கிறார்கள். பயணம் செய்வது வேறு அந்த பயணத்தின் சுவையை அனுவித்துக்கொண்டு செல்வது வேறு. பயணத்தை சுவைப்பதென்றால் ஒன்று கப்பல் பயணமாக இருக்க வேண்டும் அல்லது ரயில் பயணமாக இருக்கவேண்டும். இரண்டுமே இரு வேறு வகையான இன்பத்தைத் தரக்கூடியது. அலைகடலில் அசைந்து செல்லும்போது கூடவே நம்முடைய அசைவும் ஒருவித மயக்கத்தைத் தரவல்லது; நான்கு திசைகளிலும் எங்கு பார்த்தாலும் தண்ணீர், அது திகிலை ஊட்டும்; பெரிய பெரிய மீன்கள் செல்லும் காட்சி, அதுவும் டால்ஃபின்கள் கூட்டமாக சென்றால் ஒரு கல்யாண ஊர்வலமோ! என்ற தோற்றத்தை அளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆனால் ரயில் பயணம் வேறு, அதன் சுவையை புலவர் பெருமானே சொல்கிறார், அவர் கொடுத்திருக்கும் தலைப்போ 'நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்து'. தலைப்பிலிருந்தே தெரிகிறது புலவர் கோமான் பயணத்தை மிக்க இன்பத்துடன் ஒயிலாக அனுபவித்திருக்கிறார் என்று. அவர் படைத்துள்ள விருந்தை நாமும் சுவைப்போமா?
'மேனகை ரம்பைமின் மானே - நாகை
மாநகர் பார்ப்போம் வா தேனே'
என நாயகன் நாயகியை அழைத்துக்கொண்டு ரயில் நிலயத்திற்கு வந்து டிக்கட் எடுக்கின்றர். சற்று நேரத்தில் ரயிலும் வருகிறது. ரயில் வருவது அச்சத்தைத் தருகிறதாம்; நெளிந்து நெளிந்து வருவது காட்டு மரவட்டை ஊர்ந்து வருவதுபோல் காட்சி அளிக்கிறதாம்; நூற்றுக்கணக்கான அதன் சக்கரங்கள் மரவட்டையின் கால்கள் போலுள்ளனவாம்; பாலைவனத்து கொள்ளிவாய் பிசாசு போல ஊளையிட்டுக்கொண்டு வருகிறதாம்; காதைத் துளைக்கும் கோடை இடி போல் அதன் 'கடபடா' ஒலி அச்சத்தைத் தருகிறதாம்; எனவே அஞ்சாமல் இருக்க தலைவியை தேற்றும் பாணியை பார்ப்போம்....
'கானுறு மட்டையின் கால்கள் எனவுருள்
ககனந்தூர்தல்இஞ் சீனே-கொடுங்
கனன்மலிந்திடும் பாலையின் கொள்ளிவாய்க்
கணத்தின் மூச்சிதோ தானே-கோடை
வானிடிச் சத்தம்போல் குமுறுதலைக் கண்டு
மயங்காதே மைடியர் மானே'
உவமான உவமேயங்களைக் கையாள்வதில் புலவர் பெருமக்களை விஞ்ச யாராலும் முடியாது. பெண்ணின் முகத்தை வெண்நிலவுக்கு ஒப்பிடும் புலவர்கள் அச்சம் தரக்கூடியதை பேய்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிப்பர். அரேபிய பாலைவனத்தின் கொடுமையைச் சித்தரிக்கும் பொறுப்பு உமறு புலவருக்கு வந்தபோது பாலை நிலத்து மரங்களை பேய்களாகவும், மரப்பொந்துக்களை பேய்களின் வாய்களாகவும் அவ்வாய்களிலிருந்து வெளிவருவதை பாலைவனப் பாம்புகளாகவும் காட்டி சித்தரிக்கிறார்.
'வற்றிப்பேய் வாயுலர்ந்து வறணாக்கை நீட்டுவதுபோல்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே'
அதுபோன்றே அண்ணாவியார் புலவர் அவர்களும் ரயில் இஞ்சின் வருகைக்கு பாலைவனத்துக் கொள்ளிவாய்ப் பிசாசு என்ற உவமானத்தைக் கையாண்டிருக்கிறார்.
ரயிலும் வந்தது, தலைவன் தலைவிக்குக் கிடைத்ததோ முதல் வகுப்புப் பெட்டி, ஆனால் தலைவிகோ எப்போது சென்றடைவோம் என மனதுக்குள் ஓர் தவிப்பு; அதை தலைவன் தீர்த்து வைப்பதை புலவர் பெருமான் தீட்டுகிறார் கவிதையில்.
'பஸ்டுக் கிளாஸான வண்டியும் வாய்த்தது
மானே செல்லிநகர் ஸ்டேஷன் கழித்தது
யிர் சூடிய
மலர் வாடுமுன்
ஒயில் நாகையில்
ரயில் ஏகிடும்'
அதிவீர ராமப்பட்டினத்திலிருந்து புறப்படும் ரயில் நாகூரை வந்தடைவதற்குள் எத்தனை ஊர்களில் ஸ்டேஷன்கள் இருக்கின்றன, எந்தெந்த ஆறுகள் குறுக்கிடுகின்றன என்று வரிசைப் படுத்தும் புலவர் சில முக்கிய ஊர்களின் சிறப்புகளையும் சொல்கிறார். திருவாரூர் ஜங்ஷனுக்குப் பிறகு அடியக்கமங்களம், கூத்தூர், கீவலூர், சிக்கல், நாகப்பட்டினம் எனக் குறிப்பிடும் புலவர் வெளிப்பாளையம் நாகூருக்குமிடையில் காடம்பாடி என்றொரு ஸ்டேஷன் இருந்ததை(இப்போதில்லை) இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. அதுபோல் சிக்கலுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் அந்தனப்பேட்டை இருக்கிறது, அதை காணமுடியவில்லை,
ஆனால் அது மஞ்சக்கொல்லை வாழ்ந்த முஸ்லிம் தனவந்தர்களின் கடும் முயற்சியால் பின்னால் வந்தது.
நன்நாகை வந்தடையும் நாயகனும் நாயகியும் அங்கிருந்து புறப்படும் கந்தூரி ஊர்வலத்தைப் பார்வை இடுகின்றர். இப்போது நடப்பது போலவே அப்போதும் சிறப்பாக நடந்திருக்கிறது. கொடியூர்வலத்தில் செட்டிப் பல்லக்கு என்ற ஒரு அலங்கார வண்டி சற்றுத் தாமதமாகத் தனியே வரும், அது ஒரு தனிப்பட்ட செட்டியார் குடும்பத்தால் செய்யப்படுகிறது, எவ்வளவு காலமாக நடத்திவருகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஒருவேளை அந்த குடும்பத்தாருக்குக்கூட தெரியுமா என்பது சந்தேகம், அது நூறு வருடங்களுக்கு மேலாக நடத்திவருகின்றனர் என்பதை பாட்டின்மூலம் அறியமுடிகிறது.
'கோட்டுச் சிமிழ்க்கிண்ண மாமுலை மாதே
கொடியலங் காரத்தின் வருக்கம்- வெகு
கூட்டத்து டன்செட்டிப் பல்லக்கு வேடிக்கை
குஞ்சரத் திரளின் நெருக்கம்- புகை
போட்டுகளுங் கப்பற்சீனக் கண்ணாடிப்
பொழுதை யளக்குறார் சுருக்கம்- ரத்ன
ஷேட்டுத் தெருவெங்குங் கோலியும் நாகூரு
செல்வழியை நோக்கிப் போவதையும் பாரு'
கும்பினிகளின் ஆட்சிக் காலத்தில் நாகையும் தரங்கம்பாடியும் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்தது, இடையிலுள்ள காரைக்கால் பிரஞ்சுக்காரர்களின் பிடியிலிருந்தது. எனவே நாகைக்கும் நாகூருக்கும் பலர் வந்து போய்க் கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாகூருக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் தினமும் வந்துபோய்க்கொண்டிருந்ததாகப் புலவர் பெருமான் குறிப்பிடுகிறார் இங்கே..
'பாரிசு மக்கா மதிநா றூம் மிசுறு
பைத்துல் முக்கத்திசு வாசி- சீனா
பங்காளங் கொச்சி மலையாள மும்டில்லி
பம்பாய் மைசூர் மதராசி- என்னும்
ஊர்பல வாசிகள் வந்து ஹத்தம் மௌ
லூதுக ளோதியுங் காசி- இதோ
உண்டியல் போடுங் குடங்கள் நிறைந்தங்கு
ஓய்வில்லை பார்மக ராசி- ஒலி
வாரிசு செய்யிது செய்குமார் சடையர்
வாணருந் தாயிராக் கூட்டமும் மிடியர்
சாரிசன் வில்லை வெள்ளித் தடிக் காரியர்
சனமுந் தரி
சனமும் விமோ
சனமும் பெறத்
தினமும் வரும்'
சிந்து இலக்கியம் நாட்டுப்புற இலக்கிய வகையை சார்ந்ததாக இருப்பதால் அப்பகுதி மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இவைகளை எடுத்துக்கூறுகிறது. தவிர பெண்கள் மல்லிகை, முல்லை, சண்பகம், தாமரை, ரோசா முதலிய மலர்களை சூடும் செய்தி நமக்கு கிடைக்கிறது. மேலும் நெற்றியில் பதியும் நெற்றிச் சுட்டி, நெற்றியை சுற்றி பூட்டப்படும் வட்டவணி, தலையில் இருபுறமும் சூட்டும் பிறைச் சுட்டிகள், காதுக் கொம்பிலிருந்து கொண்டை வரை மாட்டப்படும் மயிர் மாட்டி, இன்றைய வாளியரசலை போன்ற அணிகலன்கள், கொடிபோன்ற காதணியான வள்ளை வல்லிடை, ஒன்னப்பூ, ஜிமிக்கி, தொங்கல், மூக்கில் சிறு வளையம்போல் அணியும் நத்து, புல்லாக்கு, கழுத்தில் அணியும் பதக்கம், கண்டிகை, முத்துமாலை, பூசாந்தரத் தாலி, புயத்தில் பூட்டும் கடகம், மணிக்கட்டி அணியும் கங்கணம், கைவளையல்கள், மோதிரம், கால்களில் அணியப்படும் காப்பு போன்ற தண்டை, ஒலிக்கும் சிலம்பு, பொன்னால் செய்யப்பட்ட கொலுசு, கால் விரலில் அணியும் சல்லா எனப்படும் மெட்டி ஆகிய நகைகளை தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கடற்கரை நகரங்களில் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. அவைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவைகள் இன்றும் நம் பெண்கள் அணிகின்றனர்.
கந்தூரி விழா எப்படி நடக்கிறது, என்னென்ன வேடிக்கைகள் இருக்கின்றன, எத்தனை வகையான கனிவர்க்கங்கள் முதல் உணவு வகைகள் வரை கிடைக்கின்றன என்பதை புலவரவர்கள் தவறாமல் குறிப்பிடுவது ஒரு சிறப்பு. ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே அள்ளித்தெளித்து படிப்பவர்களைப் பரவசமூட்டுவது மற்றொரு சிறப்பு.
அறுபத்தாறு பாடல்கள் கொண்ட இந்நூல் நாகூர் மீரான் ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ் அவர்கள் தர்பாரில் நற்றமிழ் அறிஞர் குலாம் காதிறு நாவலர் முன்னிலையில் 1902 ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியது.
'காரண நாயகர் தர்ஹாமகாவித்வான்
கற்றோர் துதிக்கும் உஸ்தாது- குலாம்
காதிறு நாவலர் தரிசனத் தில்நம்
கவியறங் கேற்று மாது- புகழ்
தாரணி மாணிக்கப் பூர்ஹஸன் குத்தூசு
சந்ததி ஷாஹுல் ஹமீது- அவாள்
சன்னி தானத்தினும் ஈசுபொலி மக்காம்
சியாரத் தோதி வா இப்போது- நித்தம்
சீரணித் திலங்கும் செய்யது முகம்மது
செந்தமிழ் பாடியும் வந்தோம் ரயில்மீது
பேரணி யூர்அதி வீர ராமன் இது
பிந்தா தர
விந்தந்திரு
எந்தன்மனை
வந்தேயிரு'
என்று புலவர் பெருமானே கூறி தம்முடைய 'நாகூர் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்தை' முடிக்கிறார். அன்னவர்களைப் பாராட்டி....
'இனம்பெருகும் படைப்(பு) எவைக்குங் கருவானார்
குலமணியாய் இலங்கு தாய
மனம்பெருகும் ஒலிகள்பிரான் அமர்நாகைப்
பதியேகி வருமோர் சிந்தாய்க்
கனம்பெருகு பெரும்புலமைப் பரம்பரையிற்
பெயர்தாங்கிக் கல்வி ஆய்ந்த
தனம்பெருகு செல்லிநகர் செய்யிது
முகம்மதென்பார் சாற்றன் மாதோ'
என்று அதிவீரராமப் பட்டினம் லெ.மு. முஹையிதீன் பக்கீர் அவர்களும்
'செந்தமிழில் வழிநடையாஞ் சிந்தெனவோர்
பூமாலை திரட்டி வாயால்
தந்தவலான் அவனெவனென் உசாத்துணைவன்
நல்லன்பன் தன்மைக் கேற்பப்
பந்தமுளான் செய்துமுகம் மதுவெனும்பே
ராகியருள் பன்னும் வாக்கிற்
சந்தமுளான் செல்லிநகர் சொந்தமுளான்
யாவர்மெச்சுந் தகைமை யோனே'
என்று இராமநாதபுரம் முத்தண்ண பிள்ளை அவர்களும்
'பூதலமெ வாம்புகழும் ஹமீதொலிசந்
நிதிகாணப் புகழ்ந்து பேசிக்
காதலனுங் காரிகையும் ரெயிலேறிப்
பலசிறப்புங் காட்டி வந்த
தீதகலும் வழிச்சிந்தை யெடுத்துரைத்தான்
செல்லிநகர் சீர்பெற் றோங்கு
மாதவன்செய் யிதுமுகம்ம துரைதெரிந்த
வானவரு மகிழ்கொள் வாரே'
என்று இளையான்குடி பண்டிதம் முகம்மது அபூபக்கர் அவர்களும்
'தரார் வளர்நாகை ஷாஹுல்ஹமீ தண்ணல்மேற்
பேரார் நடைச்சிந்து பேசினார்- சீராருஞ்
லிநகர் ஓங்குகவி செய்யித் முகம்மதெனும்
வல்லபுகழ் சேர்நா வலர்'
என்று ப.கா. பண்டிதம் செய்யிது அப்துல் காதிர் அவர்களும்
'நவரத்தி னக்கவிஞர் நற்குலம தோங்கும்
தவரத்ன மாகவந்த தக்கோர் - புவனத்திற்
செய்யதிரு நாகைவழிச் சிந்தினிய தாய்விளம்பும்
செய்யித் முகம்மதெனுஞ் சேய்'
என்று செல்லிநகர் அ.ரு. கந்தசாமி உபாத்தியாயர் அவர்களும் சாற்று கவிகள் பாடி பெருமைப் படுத்தியிருக்கின்றனர். நாம் எப்படி பெருமைப் படுத்தமுடியும்?
'இன்னும் கற்றுக்கொள்ளவேண்டிய
ஆலிம்களெல்லாம்
கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கோ
கற்றதில் ஐயம்
கல்லாததில் தெளிவு'
குறிப்பு:
அண்ணாவியார் புலவர்களைப் பற்றி எழுதுவதற்கு ஏதுவாக குறிப்புக்களும், செய்திகளும், நாகூர் புகைரதச் சிந்தும் தந்துதவிய அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித் அவர்களுக்கும், அப்புத்தகத்தின் தோரணவாயில் எழுதிய புலவர் அதிரைப் புலவர் அ. அஹமது பஷீர் எம்.ஏ.,பி.எட் அவர்களுக்கும், ஆய்வு முன்னுரை எழுதிய பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்களுக்கும், 'இஸ்லாமிய ஆய்வு இலக்கியத் திரட்டு' எழுதிய அதிரை தாஹா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவிர இரண்டாம் செய்யது முகம்மது அண்ணாவியாரின் இளவல் ஹபீபு முகம்மது அண்ணாவியார் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. முயன்று கொண்டிருக்கிறேன் கிடைத்ததும் தொடரப்படும். - ஹமீது ஜாஃபர்
ஜாஃபர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
Links to this post:
<$BlogBacklinkTitle$>
<$BlogBacklinkSnippet$>
<$I18NPostedByBacklinkAuthor$> @ <$BlogBacklinkDateTime$>
Create a Link
இன்றுதான் கண்ணில் பட்டது இந்த வலைப்பு நேரம் ஒதுக்கி வாசிக்கனும் கண்டிப்பாக, பின்னுட்டம் தொடரும் இன்ஷா அல்லாஹ்...
ReplyDeleteThanks Mr.Abu Ibrahim
ReplyDeleteromba sonthosamaha iruuku, karanam enakku en vappa
ReplyDeleteannaviyarai{sihappu vetty/kaithadi/nalla hight/red turukky cap with kunjam/}1975 to 1980 il kati thantharhal.avarhalai ptri padikkum pothu summa pul arikuthu,endral nambuveerhala.thanks mr ashraf.
by
NAVABARKHAN