'எந்த ஊருக்கு சென்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா' எங்கயோ கேட்ட வரிகள் தான் இந்த கட்டுரையின் வேர். நம்ம ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்.
காதிர் முகைதீன் கல்லூரி நம்ம ஊருக்கு முக்கிய அடையாளம் நாகப்பட்டினம் முதல் பேராவூரணி அறந்தாங்கி வரை மாணவர்கள் படித்த கல்லூரி பழமைவாய்ந்தது.அந்த வேப்ப மர சூழலும்,இயற்கையின் பசுமையும் அக் கல்லூரியின் வாயிலை அலங்கரிக்கும்.நான் அங்கே படிக்கவில்லையென்றாலும்(ஏன் படிக்கவில்லை என்றால் அதற்கு ஒரு (அ)நியாயமா ஒரு பதிவு போடனும் ஏன் வம்பு) கடல்காற்றின் சுகமும்,பாசாங்கான எங்கள் ஊரின் பேச்சு வழக்கும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
கடலை பார்த்த ரயில் நிலையம்.அந்த ரயில் நிலையத்தில் ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட கவலையும் தணியும்.அப்பேர்ப்பட்ட ரம்மியமான இயற்கை வலையில் அமைந்தது. இதை நான் பெருமையாகவே சொல்வேன். காலை 8 மணிக்கு ஒரு ரயிலும்,மாலை 4 மணிக்கு ஒரு ரயிலுமாக காரைக்குடி-மயிலாடுதுறை ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்கள் எங்கள் ஊரையும் தொட்டுச் செல்லும். முன்பு காரைக்குடி- சென்னை இடையே ஒடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலும் எங்கள் ஊரின் வழியே சென்று கொண்டிருந்தது.அதுக்கு மூடுவிழா நடத்தி சில வருடங்கள் ஆகி விட்டது.
சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த ரயில்நிலையம் வந்து படிக்காத மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு எங்கள் ஊர் மாணவர்களின் படிப்புக்கும், இந்த ரயில் நிலையத்துக்கும் பிணைப்பு அபரிதமானது. பல சமயங்களில் வாத்தியார்கள் முன்னிலையில் வகுப்பறையாக உருவெடுத்த பெருமை இந்த ரயில் நிலையத்தையேச் சாரும். வயதான முதியோர்களும், இளைஞர்களும் வயது வித்தியாசமின்றி வந்து போகும் இடமாக இருந்தது எனக்கு தெரிந்தவரையில் ரயில்நிலையம்தான்.
வருடா வருடம் மே அல்லது ஜூன் மாதங்களில் ரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட, மாநில அளவிளான கால்பந்து போட்டி நடக்கும்.அந்த ஒரு மாதம் முழுவதும் மாலை நேரங்களில் எங்களின் ஊரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என சொல்லலாம். 'நினைத்தாலே இனிக்கும்' என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இந்த கால்பந்து தொடர் போட்டியை குறிப்பிடலாம். அந்த தொடர் போட்டி ஆரம்பமாகும் நாளில் இருக்கும் சந்தோஷம்,அதன் நிறைவு நாளிலிருக்கும் கவலை கல்யாணம் முடிஞ்சு பத்தே நாள்'ல வெளிநாட்டுக்குப் போகிற மணமகனின் கவலைக்கு ஈடானுது. அவ்வளவு தூரம் எங்கள் மக்களோடு ஒன்றிப் போன விளையாட்டு கால்பந்து.
அவிச்ச அல்லது அவிக்காத கடலையை சாப்பிட்டுக்கிட்டு இந்த டீம் கோல் போடுமா, அந்த டீம் ஜெயிக்குமா பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டு ஆர்வத்துள்ளலில் எவ்வித கவலையும் இன்றி இருக்கும் அந்த நிமிடம் வாழ்நாள் முழுவதும் வராதா(வராது!)என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு.
ஆக்கம் - அஹ்மது இர்ஷாத்
nice blog, welcome to blogging
ReplyDelete